ஆதி கணபதி பாதம் காப்பு ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு. வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் காப்பு பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு மாணிக்கவாசப்பெருமான் பாதம் காப்பு | |
| 01 திருவாசகம்-சிவபுராணம் | பொழிப்புரை: |
| நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க | திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந் தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! |
| இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க | இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! |
| கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க | திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தி யினது திருவடி வாழ்க! |
| ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க | ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! |
| ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5 | ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க! |
| வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க | மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக! |
| பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க | பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக! |
| புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க | தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாத வனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக! |
| கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க | கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக! |
| சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10 | கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக! |
| ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி | ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். |
| தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி | ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவ பிரானது திருவடிக்கு வணக்கம். |
| நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி | அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். |
| மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி | நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். |
| சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15 | சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். |
| ஆராத இன்பம் அருளுமலை போற்றி | தெவிட்டாத இன்பத்தைக் கொடுக் கின்ற மலைபோலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். |
| சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் | சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால் |
| அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச் | அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி |
| சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை | மனம் மகிழும்படி சிவபுராணந்தன்னை ( சிவனது அநாதி முறைமையான பழமையை) |
| முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20 | முன்னைய வினை முழுமையும் கெடவும் யான் சொல்லுவேன் |
| கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி | நெற்றிக் கண்ணை உடைய சிவன் தன் கருணையை காட்டியதால் இங்கு வந்து |
| எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி | எண்ணத்தில் கற்பனை செய்து பார்க்க இயலாத பேரழகை கொண்டவனுடைய சிவனின் திருவடி வணங்கி |
| விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் | வானம் பூமி என்று எங்கும் பரந்து நிற்கும் ஒளியாய் விளங்குபவனே |
| எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் | எண்ணிப்பார்த்து அளவிடும் எல்லை இல்லாதவனே நின் பெரிய இயல்புகொண்ட உன்னுடைய மிக்க சிறப்பை |
| பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25 | கொடிய வினையையுடையவனாகிய யான் , புகழுகின்ற விதம் சிறிதும் அறிகிலேன். |
| புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் | புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும் |
| பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் | பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும் |
| கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் | கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும், - பூத கணங்களாகியும் |
| வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் | வலிய அசுரராகியும், முனிவராகியும், தேவராகியும் |
| செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 | இயங்குகின்ற இந்த நிலையியற் , அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே |
| எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் | எல்லாப் பிறவிகளிலும் பிறந்து யான் மெலிவடைந்தேன் எம்பெருமானே |
| மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் | உண்மையாகவே உன் அழகிய திருவடிகளைக் கண்டு வீடு (மோட்சம் ) பெற்றேன். |
| உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற | நான் உய்யும்படி என் மனத்தில் (ஓம்) பிரணவ உருவாய் நின்ற |
| மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் | உண்மையானவனே, வெற்றியுடையவனே, காளை வாகனத்தவனே, வேதங்கள் |
| ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 | ஐயனே என்று துதிக்க உயர்ந்து அளவிட முடியாத ஆழமாகவும், அகலமாகவும், நுண்ணிய சிறிய பொருளாகவும் இருப்பவனே |
| வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா | வெப்பமாய், குளுமையாய், யாகம் செய்விக்கும் தூய்மையானவனே |
| பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி | பொய்யான மாயைகள் எல்லாம் என்னிருந்து தூர போய் அகல, வந்து அருளி |
| மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே | மெய்ஞானம் ஆகி ஒளிர்கின்ற உண்மைச் சுடரே |
| எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே | எந்த ஞானமும் இல்லாதவனாக இருக்கின்ற எனக்கு இன்பத்தைத் தந்த இறைவனே |
| அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40 | அஞ்ஞானம் என்ற இருளைப் போக்கும் நல்ல அறிவாகவும் இருக்கும் சிவனே |
| ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் | தோற்றம் நிலை முடிவு என்பவை இல்லாதவனே, எல்லா உலகங்களையும் |
| ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் | படைப்பாய்,நிலைபெறுத்துவாய், ஒடுக்குவாய், அருள் செய்வாய் |
| போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் | பிறவியிற்செலுத்துவாய் அடியேனை உன்னைத் தொழும் அடியார்கள் கூட்டத்தில் என்னை புகவைப்பாய் |
| நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே | பூவின் மணம்போல நுட்பமாய் இருப்பவனே, தொலைவில் இருப்பவனே, அண்மையில் இருப்பவனே, |
| மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45 | சொல்லும் மனமும் கடந்து நின்ற வேதப் பொருளாய் உள்ளவனே |
| கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் | சிறந்த அன்பரது மனத்துள் கறந்த பாலும் ( கரும்பு) சருக்கரையும் நெய்யும் கூடின போல இன்பம் மிகுந்து நின்று |
| சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று | சிறந்த அன்பரது மனத்துள் தேன் போல் இன்பம் மிகுந்து நின்று |
| பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் | எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எங்கள் பெருமானே |
| நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த | ஐந்து நிறங்களை உடையவனே , தேவர்கள் துதிக்க |
| மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 | தேவர்கள் உன்னை துத்திபோதும் அவர்களுக்கு காட்சி தராமல் நீ உன்னையே மறைத்து நின்றாயே, வலிய வினையையுடையவனாகிய என்னை |
| மறைந்திட மூடிய மாய இருளை | கடுமையான வினைகளில் சிக்கியிருக்கும் என் உடலினுள், அறியாமை, ஆணவம் போன்ற மாய இருளை மூடி மறைத்தும் |
| அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் | புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் (விதிகளால் ) கட்டி |
| புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி | அதை வெளிப்புற அழுக்கு நிறைந்த தோலினால் மூடி , எவ்விடத்தும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து |
| மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை | மலம் ஒழுகுகின்ற,ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை |
| மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55 | குலையும்படி, ஐம்புலன்களும், வஞ்சனை பண்ணுதலால் (அந்த உடலுக்கு மலத்தை வெளியேற்றும் ஒன்பது துளைகளையும் வைத்து, அதிலிருக்கும் ஐந்து புலன்களும் உன்னை அறியவிடாமல்,) |
| விலங்கு மனத்தால் விமலா உனக்குக் | உன்னை விட்டு நீங்கும் விலங்கு மனத்தினாலே, உன்பொருட்டு |
| கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் | அன்பினால் உன் நினைவினில் கலந்து, உன்னையே எண்ணி உள்ளத்தினால் உருகும் |
| நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி | நோய் தாக்கக்கூடிய உடலையுடைய இந்த நன்மையில்லாத சிறியேனுக்காக கருணை புரிந்து, |
| நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி | பூமியின்மேல் எழுந்தருளி நீண்ட திருவடிகளைக் காட்டி |
| நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 | நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத் |
| தாயிற் சிறந்த தயாவான தத்துவனே | இவ்வுலகிலேயே தாயின் அன்பு தான் மிகப்பெரியது. அந்த தாயினும் மிகுதியான அன்பை உடைய தத்துவமானவனே |
| மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே | களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, பூப்போன்ற சுடரே |
| தேசனே தேனா ரமுதே சிவபுரனே | குரு மூர்த்தியே,தேனே ,அரிய அமுதே, சிவபுரத்தை யுடையானே |
| பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே | பாசமாகிய பற்றினை அறுத்து அருள் புரியும் அறிவில் சிறந்தவனே , காக்கின்ற ஆசிரியனே |
| நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65 | அன்போடு கூடிய அருளைச்செய்து, என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழிய, |
| பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே | என் உள்ளம் அகலாது நின்ற பெருங்கருணையாகிய பெரிய நதியே |
| ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே | தெவிட்டாத அமிர்தமே, எல்லையில்லாத பெருமானே |
| ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே | ஆராயாதார் மனத்தில் மறைகின்ற ஒளியையுடையானே |
| நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே | என் மனத்தை நீர் போல உருகப்பண்ணி, என் அரிய உயிராய் நின்றவனே |
| இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70 | சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே, அன்பர்பொருட்டு அவற்றை உடையவனே |
| அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் | அன்பர்களிடத்து அன்புள்ளவனே, கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற |
| சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே | பேரொளியையுடையவனே, நிறைந்த இருளானவனே, புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே |
| ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே | முதல்வனே, முடிவும் நடுவும் ஆகி அவையல்லாது இருப்பவனே |
| ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே | என்னை இழுத்து ஆட்கொண்டருளின எமது தந்தையாகிய சிவபெருமானே |
| கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75 | மிகுந்த உண்மை ஞானத்தால், சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், |
| நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே | எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே, இயற்கையில் நுட்பமாகிய அறிவே |
| போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே | போக்கும் வரவும் நிற்றலும் இல்லாத புண்ணியனே |
| காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே | எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே, காண்பதற்கரிய பெரிய ஒளியே |
| ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற | மகாநதி போன்ற இன்பப் பெருக்கே, அப்பனே, மேலோனே, நின்ற |
| தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80 | நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும்,சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும் |
| மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் | மாற்றம் ஆம் வையகத்தின் - மாறுபடுதலையுடைய உலகத்தில், வெவ்வேறே வந்து - வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவு ஆம் - அறிவாய் விளங்கும், |
| தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் | தேற்றனே - தெளிவானவனே, தேற்றத் தெளிவே - தெளிவின் தெளிவே, என் சிந்தனையுள் |
| ஊற்றான உண்ணா ரமுதே உடையானே | ஊற்று ஆன - என் மனத்துள் ஊற்றுப் போன்ற, உண் ஆர் அமுதே - பருகுதற்கு அரிய அமிர்தமே, உடையானே - தலைவனே. |
| வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப | : வேற்று விகார - வெவ்வேறு விகாரங்களையுடைய, விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் - ஊனாலாகிய உடம்பினுள்ளே தங்கிக் கிடக்கப் பொறேன், |
| ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85 | எம் ஐயா - எம் ஐயனே, அரனே - சிவனே, ஓ என்று என்று - ஓ என்று முறையிட்டு, |
| போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் | வணங்கி, திருப்புகழை ஓதியிருந்து, அறியாமை நீங்கி,அறிவுருவானவர்கள் |
| மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே | மறுபடியும் இவ்வுலகில் வந்து,வினைப் பிறவியையடையாமல், |
| கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே | வஞ்சகத்தையுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை அறுக்க வல்லவனே |
| நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே | நடு இரவில்,நடனம் செய்கின்ற, இறைவனே |
| தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 | திருத்தில்லையில் நடிப்பவனே, தென்பாண்டி நாட்டையுடையவனே |
| அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று | துன்பப் பிறப்பை அறுப்பவனே, ஓவென்று முறையிட்டு |
| சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் | துதித்தற்கு அருமையானவனைத் துதித்து,அவனது திருவடியின்மீது |
| சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் | பாடிய பாட்டின்,பொருளையறிந்து துதிப்பவர், |
| செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் | செல்வர் சிவநகரத்திலுள்ளவராய் சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலை பெறுவர். |
| பல்லோரும் ஏத்தப் பணிந்து 95 | எல்லாரும் துதிக்க வணங்கி. |
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.