உ திருச்சிற்றம்பலம்
ஆதி கணபதி பாதம் காப்பு ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு. வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் அழகன் பாதம் காப்பு குருநாதன் பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு மாணிக்கவாசப்பெருமான் பாதம் காப்பு |
சிறப்புப் பாயிரம் தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன் |
திருவாசகம் - 03 - திருவண்டப் பகுதி | பதவுரை | பொருளுரை |
1-12 இறைவனின் பெருமையும் வலிமையும் புகழும் வரிகள் |
அண்டப் பகுதியி ணுண்டைப் பிறக்கம் | அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அண்டப் பகுதி = அண்டம் எனப்படும் இந்த பேருலகின் பகுதி
உண்டை = உருண்டை
அண்டம் என்பது முட்டை வடிவத்தை குறிக்கும். அதனால் உண்டை ( உருண்டை ) என்றார்.
பிறக்கம் = குவியல், தொகுதி | அண்டம் எனப்படும் இந்த பேருலகம் உருண்டை ஆகிய வடிவம் ஆனது |
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி | அளப்பு = அளவு எடுத்தல்
அளப்பருந் தன்மை = அளப்பு அரும் தன்மை = அளவு எடுக்கவே இயலாத தன்மை
வளப்பெருங் காட்சி = வளம் மிக்க பெரும் காட்சி | அளவு எடுக்கவே இயலாத தன்மை உடன் கூடிய வளம் மிக்க பெரும் காட்சி |
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் | ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
ஒன்றனுக்கு ஒன்று = ஒன்றுக்கு ஒன்று
நின்றெழில் = நின்ற எழில் ( அழகு )
பகரின் = பகர்தல் = சொல்லுதல்
| ஒன்றுக்கு ஒன்று நின்ற அழகு குறித்து சொன்னால் |
நூற்றொரு கோடி மேல்பட விரிந்தன | நூற்றொரு கோடியின் = நூற்று ஒரு கோடி - அதாவது எல்லையே இல்லாத ஒன்று
| நூற்று ஒரு கோடிக்கு மேல் , அதாவது எல்லையே இல்லாது விரிந்த இந்த உலகம் |
இன்னுழை கதிரின் றுன்னணுப் புரையச் 5 | இன்னுழை கதிரின் நுன் அணுப் புரையச் 5
இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5
இல் நுழை = இல்லங்களின் நுழையும்
கதிரின் = சூரிய கதிர்களின்
துன் அணு = நுண்ணிய நெருங்கின அணுக்கள்
புரைய = ஒப்ப , அதுபோலும் ( இரு பொருள்கள் ஒத்திருப்பதை உணர்த்தும் உவம உரு ) | இல்லத்தில் நுழையும் சூரிய கதிர்களின் நுண்ணிய நெருங்கின அணுக்கள் போலும் |
சிறிய வாகப் பெரியோன் தெரியில் | சிறிய ஆகப் பெரியோன் தெரியின்
சிறிய ஆகப் = அவற்றை எல்லாம் சிறியது போல் ஆக
பெரியோன் = இறைவன்
தெரியின் = இருப்பவன் | அந்த பேரண்டங்கள் எல்லாம் ஒரு அணு குவியல் போல சிறியது போல் இறைவன் பாதத்தில் உள்ளன.
இறைவன் பெருமை மனதுக்கும் சொல்லுக்கும் எட்டா இயல்புடையது. |
வேதியன் றொகையோடு மாலவன் மிகுதியும் | வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
வேதியன் தொகையொடு = பல பிரம்மாகளின் கூட்டத்தோடு
மாலவன் மிகுதியும் = பல திருமால்களின் கூட்ட மிகுதியும்
| பல பிரம்மாகளின் கூட்டத்தோடு பல திருமால்களின் கூட்ட மிகுதியும் |
தோற்றமும் சிறப்பு மீற்றோடு புணரிய | தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
தோற்றமும் = இந்த உலக படைப்பும்
சிறப்பும் = அந்த படைப்பின் சிறப்பும்
ஈறு = பேரழிவுக்கு முன்னர் உண்டாகும் சிறு சிறு அழிவு
புணரிய = சேர்ந்த | இந்த உலக படைப்பும், அந்த படைப்பின் சிறப்பும் , அண்ட பேரழிவுக்கு முன்னர் உண்டாகும் சிறு சிறு அழிவுகளும் சேர்ந்த |
மாப்பெ றூழியு நீக்கமு நிலையுஞ் | மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
மாப்பேர் = மிகப்பெரிய
ஊழி = பேரழிவுக்காலம்
மாப்பேர் ஊழி = இந்த அண்டத்தின் பேரழிவுக்காலம்
நீக்கமும் = அந்த பேரழிவுக்காலதின் பின்னர் அண்டம் புதிதாக தோன்றுதலும்
நிலையும் = புதிதாக தோன்றிய அண்டம் நிலைத்த தன்மை பெறுதலும் | இந்த அண்டத்தின் மிகப்பெரிய பேரழிவுக்காலமும் , அந்த பேரழிவுக்காலதின் பின்னர் அண்டம் புதிதாக தோன்றுதலும் , புதிதாக தோன்றிய அண்டம் நிலைத்த தன்மை பெறுதலும் |
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத் 10 | சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10
சூக்கம் = சூக்ஷும / சூக்குமம் / நுண்மை = பருப்பொருளின் நுண்ணியவடிவம் ( கண்ணால் பார்க்க இயலாத )
தூலம் = ஸ்தூலம் = கண்களால் பார்க்கக்கூடிய பெரிய பொருள்
சூறை = சுழல்
மாருதம் = காற்று
சூறை மாருதம் = சுழல் காற்று = சூறாவளி | பருப்பொருளின் நுண்ணியவடிவமும் , பருப்பொருளின் பெரிய அகண்ட வடிவமும் , சுழல் காற்றினால் |
தெறியது வழியிற் | எறியது வளியின்
எறி = வீச்சு
வளி = சிறு காற்று
| சிறு காற்று வீச்சு போல |
கொட்கப் பெயர்க்கும் குழகன் ; முழுவதும் | கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்
கொட்க = சுழல
பெயர்க்கும் = நிலைபெயர்கின்ற
குழகன் = அழகன் சிவபெருமான் | சுழல வைத்து நிலைபெயர்கின்ற வகையில் வைக்கும் அழகன் சிவபெருமான் , முழுவதும் |
13 - 16 முத்தொழில் முதல்வன் புகழ் பாடும் வரிகள்
|
படைப்போற் படைக்கும் பழையோன் ; படைத்தவை | படைப்போன் படைக்கும் பழையோன் ; படைத்தவை
முழுவதும் படைப்போன் = எல்லாவற்றையும் படைபவனாகிய பிரமன்
படைக்கும் = உருவாகும்
பழையோன் = மிகவும் தொன்மை வாய்ந்தவன் எம் ஈசன்
படைத்தவை = அங்ஙனம் படைக்கப்பட்ட | எல்லாவற்றையும் படைபவனாகிய பிரமனை உருவாகும் எம் ஈசன் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்தவன் |
காப்போற் காக்குங் கடவுள் ; காப்பவை | காப்போன் காக்கும் கடவுள் ; காப்பவை
காப்போன் = பாதுகாப்பவன்
காக்கும் கடவுள் = திருமால் , மஹா விஷ்ணு
காப்பவை = அங்ஙனம் காக்கப்பட்ட பொருள்களை | அங்ஙனம் படைக்கப்பட்ட பொருள்களை காக்கும் கடவுள் ஆன மஹா விஷ்ணுவையும் காக்கும் கடவுள் எம் ஈசன் |
கரப்போன் , கரப்பவை கருதாக் 15 | கரப்போன் = உரிய காலத்தில் அதன் மூலப்பொருள்களில் ஒடுக்கும் இறைவன்
கரப்பவை கருதாக் = அங்ஙனம் ஒடுக்கப்பட்டவற்றை பற்றி எந்த நினைப்பும் இல்லாத
| அங்ஙனம் காக்கப்பட்ட பொருள்களை உரிய காலத்தில் அதன் மூலப்பொருள்களில் ஒடுக்கும் இறைவன் |
கருத்துடைக் கடவுள், திருத்தகும் | கருத்துடைக் கடவுள் = (அழிப்பவற்றை நினையாத) கருத்தை உடைய கடவுள்
திருத்தகும் = சிறப்பு பொருந்திய | (அழிப்பவற்றை நினையாத) கருத்தை உடைய கடவுள் , சிறப்பு பொருந்திய |
17- 19 வீடு பேற்றுக்கும் ( முக்திக்கும்) உரிய இறைவன் |
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும் | அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்
அறுவகைச் சமயத்து = ஆறு + சமயம் = அறுசமயம்.இந்து மதத்தை மக்கள் வழிபடும் கடவுளரின் அடிப்படையில் ஆறு பிரிவுகளகப் பிரித்துள்ளனர்.அவைகளுக்கு மொத்தமாக அறுசமயம் என்று பெயர்.இவைகளுக்கு தனித்தனியாக வழிபாட்டு முறைகளும் சொல்லும் மந்திரங்களும் வேறுபடும்.அப்பிரிவுகள் (1) சைவம் (பரம சிவன்), (2)வைணவம் (விஷ்ணு), (3) கௌமாரம் (சுப்பிரமணியன், முருகன்), (4) காணபத்தியம் (விநாயகர்), (5)சௌரம் (சூரியன்), (6) சாக்தம் ( சக்தி, துர்கை).
அறுவகை யோர்க்கும் = ஆறு வகை சமய பிரிவினருக்கும்
| ஆறு சமயம் மற்றும் ஆறு வகை சமய பிரிவினருக்கும் |
வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி | வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி
வீடுபேறாய் நின்ற = முக்தி அளிக்கும் ( சிவபுரம் ) பேரின்ப வீடுகளாக நின்ற
விண்ணோர் பகுதி = தேவர்களின் பகுதிகள்
| முக்தி அளிக்கும் ( சிவபுரம் , விஷ்ணுபுரம் போன்ற ) பேரின்ப வீடுகளாக நின்ற தேவர்களின் பகுதிகள் |
கீடம் புரையும் கிழவோ நாடொறும் | கீடம் புரையும் கிழவோன், நாள் தோறும்
கீடம் = புழு
புரையும் = போன்ற, ஒத்த
கீடம் புரையும் = ( தேவர்கள் பகுதிகள்) புழுக்களை போல/ஒத்த
கிழவோன் = உரிமையுடையோன்
நாடொறும் = நாள் தோறும் | தேவர்கள் பகுதிகள் புழுக்கள் போல சிவபுரம் என்ற பெரிய நகரதை உடைய உரிமையுடையோன் |
20 - 28 பஞ்ச பூதங்களுக்கும் ஆற்றல் தருபவன் இறைவன் |
அருக்கனிற் சோதி யமைத்தோன்;திருத்தகு 20 | அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு 20
அருக்கனின் = சூரியனில்
திருத்தகு = அழகு பொருந்திய
| இறைவன் சூரியனில் ஒளியை உள்புகுத்தி ஒளிரவைத்தார் , அழகு பொருந்திய |
மதியில் தண்மை வைத்தோன், திண்திறல் | மதியில் தண்மை வைத்தோன், திண்திறல்
மதியில் = சந்திரனில்
திருத்தகு மதி = சிவபெருமானின் சிகையை அழகுபடுத்துவதால் சந்திரன் , அழகு பொருந்திய மதி என்று பெயர்
தண்மை = குளிர்ச்சி
திண்திறல் = வலிய வெற்றியை உடைய | அழகு பொருந்திய மதியில் குளிர்ச்சியை உண்டாக்கியவன் இறைவன் |
தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர் | வெம்மை = வெப்பம்
பொய்தீர் = பொய் அற்ற ( பொய்யாகாமல் ) | வலிய வெற்றியை உடைய தீயில் வெப்பம் உள் வைத்த இறைவன் |
வானில் கலப்பு வைத்தோன், மேதகு | வானில் = ஆகாயத்தில்
கலப்பு = மற்ற மூலப்பொருள்கள்
மேதகு - உயர் திரு | பொய்யாகாமல் உள்ள ஆகாயத்தில் மற்ற மூலப்பொருள்களை வைத்தவன் இறைவன் |
காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ் | காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ்
ஊக்கம் = முயற்சி. இங்கு வீசுதலாகிய முயற்சியை குறிக்கும்.
நிழல் திகழ் = நிழல் பொருந்திய
| வாயுவிடத்தில் மேம்பட்ட வலிமையளிக்கும் வீசும் சக்தியை அருளியும் |
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25 | நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25
நீரில் = தண்ணீரில்
இன்சுவை = இனிய சுவை
| நிழல் பொருந்திய தண்ணீரில் இனிய சுவை வைத்தவவன் இறைவன் ஈசன் |
மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று | திண்மை = வலிமை
| வெளிப்படையாக மண்ணில் வலிமையை வைத்தவன் |
எனைப் பலகோடி எனைப் பலபிறவும் | பலகோடி = பலகோடி பொருள்களை | எவ்வளோவோ பல கோடியாகிய எண்ணில் அடங்காத பல பிற பொருள்களிலும் |
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்று | அவ்வயின் = அப்பொருள்களின் தன்மையில்
அஃதான்று = அங்கனமுமன்றி , அது மட்டும் இல்லாமல் | அந்த அந்த பொருள்களின் தன்மையை அந்த அந்த பொருள்களின் அடைத்து வைத்து |
29 - 65 இறைவன் அருமை பெருமைகளை காண்க |
முன்னோன் காண்க, முழுதோன் காண்க | காண்க = வெளிப்பட்டு அருளுபவன் அன்பர்க்கு , அறிந்துகொள்க
முன்னோன் = அனைத்து பொருளுக்கும் அனைத்து உயிருக்கும் முன்னோன்
முழுதோன் = அனைத்து பொருள்களையும் அனைத்து உயிர்களையும் உடையவன்
| யாவற்றுக்கும் முன்னோனுமவன் அவன் வெளிப்பட்டு அருளுபவன் என அறிந்துகொள்க. எல்லாமும் அவனே ஆனவன் ஆக வெளிப்பட்டு அருளுபவன் அறிந்துகொள்க |
தன்நேர் இல்லோன் தானே காண்க 30 | தன்நேர் = தனக்கு நிகர் | தனக்கு நிகர் யாரும் இல்லாதவனை அறிந்துகொள்க |
ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க | ஏனம் = பன்றி
எயிறு = பல்
அணிந்தோன் = மாலையாக அணிந்தவன்
(பன்றியின் பல்லை அணிந்த புராணம்) | பன்றி உருவம் கொண்ட திருமாலிடம் இருந்து பல்லைபிடுங்கி மாலையாக அணிந்தவன் இறைவனை அறிந்துகொள்க |
கானம் புலியுரி அரையோன் காண்க | கானம் = காடுகளில் வாழ்கின்ற
புலியுரி = புலி உரி = புலியின் தோல்
அரையோன் = தனது இடுப்பில் அணிந்தவன்
| காடுகளில் வாழ்கின்ற புலியின் தோலை தனது இடுப்பில் வெற்றிச்சின்னமாக அணிந்தவனை அறிந்துகொள்க |
நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும் | நீற்றோன் = இறைவன் பராமச்சரியனாக வந்தபோது திருநீறு தரித்து வந்தமையால் நீற்றோன் என பெயர். உடம்பெலாம் திருநீறு தரித்தோன்
நினைதொறும் = நினைக்கும் பொழுது | உடம்பெலாம் திருநீறு தரித்தோன் காண்க. இறைவனை நினைக்கும் பொழுது நினைக்கும் பொழுது |
ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன் | ஆற்றேன் = பொறுக்கமாட்டேன்
அந்தோ கெடுவேன் = அப்பிரிவினையை தாங்கமுடியாமல் கெட்டுஅழிவேன் | இறைவனை நினைக்கும் பொழுது நினைக்கும் பொழுது அந்த பிரிவை பொறுக்கமாட்டேன் காண்க.அப்பிரிவினையை தாங்கமுடியாமல் கெட்டுஅழிவேன் |
இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35 | இன்னிசை = இனிய இசை
இசைத்தோன் = இசையாக இணைந்து இருப்பவன் | இனிய இசை வீணையில் கலந்து இருப்பதுபோல , அணைத்து உயிர்களிலும் கலந்து இருந்த இறைவன் காண்க |
அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன் காண்க | அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க
அன்னது ஒன்று = அப்படிப்பட்ட வீணையின் இசை ஒன்றை
அவ்வயின் = அந்த வீணையில் இருந்து
அறிந்தோன் = அனைத்தும் அறிந்தவன் இறைவன் | அப்படிப்பட்ட அந்த வீணையில் இருந்து வீணையின் இசை ஒன்றை அனைத்தும் அறிந்தவன் இறைவன் காண்க |
பரமன் காண்க, பழையோன் காண்க | பரமன் = எல்லா பொருள்களுக்கும் மேலான இறைவன்
பழையோன் = எல்லா பொருள்களுக்கும் ஆதி பழமையான இறைவன் | எல்லா பொருள்களுக்கும் மேலான இறைவனை காண்க, எல்லா பொருள்களுக்கும் ஆதி பழமையான இறைவனை காண்க |
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க | பிரமன்மால் = பிரமன், திருமால்
பெரியோன் = மிக உயர்ந்த இறைவன்
| பிரமன், திருமால் ஆகிய தெய்வங்களால் காண இயலாத மிக உயர்ந்த இறைவனை காண்க |
அற்புதன் காண்க, அநேகன் காண்க | அற்புதன் காண்க= வியக்கத்தக்க இயல்புகளை உடைய இறைவனை காண்க
அநேகன் காண்க = உயிர்களின் பலவகை வேறுபாடுகளை உடைய இறைவனை காண்க | வியக்கத்தக்க இயல்புகளை உடைய இறைவனை காண்க, உயிர்களின் பலவகை வேறுபாடுகளை உடைய இறைவனை காண்க |
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40 | பதம் = அளவு , தரம் சொற்பதங் = சொல் பதம் = வாசகத்திற்கு எட்டிய பொருள் சொற்பதங் கடந்த = சொல் பொருளுக்கு அப்பாற்பட்ட
தொல்லோன் = மிக மிகப்பழையவன் | சொல் பொருளுக்கு அப்பாற்பட்ட மிக மிகப்பழையவன் இறைவனை காண்க |
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க | சித்தம் = மனம் சேட்சியன் = தூரத்தில் உள்ளவன்
| மனதால் செல்ல இயலாத தூரத்தில் உள்ள இறைவனை காண்க |
பத்தி வலையில் படுவோன் காண்க | படுவோன் = அடைபடுவோன்
| அடியர்வர்களின் பத்தி வலையில் அடைபடுவோன் காண்க ( சொல்லாலும் , மனதாலும் அடங்காத இறைவன் பக்தி என்னும் வலையில் அடைபடுபவன் ) |
ஒருவன் என்றும் ஒருவன் காண்க | ஒருவன் = ஒப்பற்றவன்
| ஒரே ஒருவனே என்று கூறப்படும் ஒப்பற்ற இறைவனை காண்க |
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க | விரி = பறந்து விரிந்த
பொழில் = உலகம்
விரிந்தோன் = அண்ட சராசரங்களும் அத்தனையும் விஞ்சி நிறைந்து உள்ள இறைவனை
விரிபொழில் = மண் முதல் விண் வரை விரிந்த உலகம் | மண் முதல் விண் வரை விரிந்த உலகம் முழுவதும் அண்ட சராசரங்களும் அத்தனையும் விஞ்சி நிறைந்து உள்ள இறைவனை காண்க |
அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45 | ஐயோன் = மிக நுண்ணியவன்
| அணுக்கள் தரும் நுண்ணிய தன்மையிலும் அதனைவிட மிக நுண்ணியவன் இறைவனை காண்க |
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க | இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
இணைப்பு = ஒப்பு
அரும் = இல்லாத
ஈசன் = தலைவன்
| ஒப்பு இல்லாத பெருமை உடைய தலைவனை காண்க |
அரிய அதில் அரிய அரியோன் காண்க | அரியதில் அரிய அரியோன் காண்க
அரியதில் = மிக அரிய பொருள்
அரியோன் = அரியவன்
| மிக அரிய பொருள் அதனுள் அரியவனாகிய அரியவன் இறைவன் காண்க |
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க | மருவி = கலந்து
வளர்ப்போன் = உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களை காப்பவன் | இந்த உலகில் உள்ள எல்லா பொருள்களிலும் கலந்து காப்பவனை காண்க |
நூல்உணர்வு உணரா நுண்ணியன் காண்க | நூல்உணர்வு = அறநூல்களினால் உணரக்கூடிய உணர்வு
| அறநூல்களினால் உணரக்கூடிய உணர்வுகளினால் உணர இயலாத மிகவும் நுணுக்கமானவனை காண்க |
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50 | மேலோடு கீழாய் = ஆகாயம் பூமி | மேலும் கீழும் என எங்கும் நிறைந்தவன் காண்க |
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க | அந்தமும் = முடிவும்
ஆதியும் = ஆரம்பமும்
அகன்றோன் = இல்லாதவன் | தனக்கு முடிவும் ஆரம்பமும் இல்லாதவன் காண்க |
பந்தமும் வீடும் படைப்போன் காண்க | பந்தமும் = ஆன்மாக்களுக்கு மும்மலம் என்ற பந்தம்
வீடும் = ஆன்மாக்களுக்கு முக்தி எனும் வீடு
படைப்போன் = உருவாக்குபவன்
| ஆன்மாக்களுக்கு மும்மலம் என்ற பந்தமும் முக்தி எனும் வீட்டையும் உருவாக்குபவனை காண்க |
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க | நிற்பதுஞ் = நிலையற்ற பொருள்கள்
செல்வதும் = அசையும் பொருள்கள் | அசையும் பொருள்கள் மற்றும் அசையா பொருள்களினுள் வியாபித்து நின்ற இறைவனை காண்க |
கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க | கற்பமும் = படைக்கும் கடவுள் பிரம்மனை உருவாக்கி கற்பகாலம் எனும் ஆதி காலம்
இறுதியும் = இந்த அண்ட பேரண்டமும் அழிந்து ஒடுங்கும் இறுதி காலம்
கண்டோன் = செய்தோன் | படைக்கும் கடவுள் பிரம்மனை உருவாக்கி கற்பகாலம் எனும் ஆதி காலம் ,இந்த அண்ட பேரண்டமும் அழிந்து ஒடுங்கும் இறுதி காலம் என்ற இந்த இரண்டு காலத்தையும் செய்தோன் காண்க |
யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55 | யாவரும் = எல்லா உயிர்களும்
உறும் = மிகுதி
| எல்லா உயிர்களும் அருள் மிகுதியாக பெற அருளும் ஈசன் காண்க |
தேவரும் அறியாச் சிவனே காண்க | தேவரும் அறியா = தேவராக இருந்தும் அன்பு இல்லாதவரால் அறிய இயலாத
| தேவராக இருந்தும் அன்பு இல்லாதவரால் அறிய இயலாத எம் இறைவன் சிவனே காண்க |
பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க | பெற்றி = தன்மை
பெற்றியன் = தன்மைகளை பெற்றவன்
| பெண் ,ஆண் , அலி எனும் தன்மைகளை பெற்றவனை காண்க |
கண்ணால் யானும் கண்டேன் காண்க | கண்ணால் = மெய்ஞ்ஞானம் இல்லாத இவுலக பொருள்களை மட்டும் பார்க்கும் எனது ஊனக்கண் யானும் = நானும் கண்டேன் = பார்த்தேன்
| மெய்ஞ்ஞானம் இல்லாத இவுலக பொருள்களை பார்க்கும் மட்டும் எனது ஊனக்கண்ணால் நானும் என் இறைவனை கண்டேன் காண்க |
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க | நனி = மிகுதி
( இறைவனை நீரூற்றாகவும் அருளை நீராகவும் உருவகம் செய்து மனைக்கவாசகப்பெருமான் அருளியுள்ளார் ) | இறை அருள் மிகுதியாக சுரக்கும் அமுதே காண்க |
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60 | கருணை = தன்னை ஆட்கொள்ள வேண்டி இறைவன் இந்த நிலவுலகத்தில் தனது அருள் செறிந்த பாதத்தை வைத்தத கருணை
| எம் இறைவன் கருணையின் பெருமை கண்டேன் காண்க |
புவனியல் சேவடி தீண்டினன் காண்க | புவனி = இந்த நிலவுலகம்
சேவடி = இறைவன் திருவடிகள்
| இந்த நிலவுலகதில் இறைவன்தின தன் திருவடிகளால் தீண்டினன் காண்க |
சிவன் என யானும் தேறினன் காண்க | யானும் = நானும்
தேறினன் = அறிந்துகொண்டேன் | இந்த அடியவனுக்கு காட்சி கொடுத்தது எம் இறைவன் சிவன் என நானும் அறிந்துகொண்டேன் காண்க |
அவன்எனை ஆட்கொண்டு அருளினன் காண்க | அவன் = எம் இறைவன் ஈசன்
ஆட்கொண்டு = அடியாராக ஏற்றுக்கொள்ளுதல்
| எம் இறைவன் ஈசன் எனை அடியாராக ஏற்றுக்கொண்டு அருளினன் காண்க |
குவளைக் கண்ணி கூறன் காண்க | குவளைக் கண்ணி = நீல கரும் குவளை ( கருங்குவளை ) மலர் போல கண்களை உடைய உமை அம்மை ஆகிய பார்வதி தேவி
கூறன் = உமையம்மையை தனது ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் | நீல கரும் குவளை ( கருங்குவளை ) மலர் போல கண்களை உடைய உமை அம்மை ஆகிய பார்வதி தேவியை தனது ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் காண்க |
அவளுந் தானும் உடனே காண்க 65 | அவளுந் தானும் = அம்மையும் அப்பனும் ஒன்றி காட்சியளிக்கும்
| அம்மையும் அப்பனும் ஒன்றி காட்சியளிக்கும் விளங்குதலை உடனே காண்க |
66 - 95 பரம ஆனந்த பெரும் கடல் அருள் பொழியும் இறைவன் வாஅழ்க ( சிவார்ச்சனை மகிமை ) |
பரமா னந்தம் பழம் கட லதுவே | பரமானந்த பழம் கடல் = முக்தியென்னும் பேரின்பத்தை அளிக்கக்கூடிய மாபெரும் பழமை வாய்ந்த கடல்
| முக்தியென்னும் பேரின்பத்தை அளிக்கக்கூடிய மாபெரும் பழமை வாய்ந்த கடல் அதுவே |
கருமா முகிலில் தோன்றித் | கருமா = கரி + மா
கரி = கரிய
மா = பெரிய
முகில் = மழைமேகம்
| கரிய பெரிய மழைமேகம் போல தோன்றி |
திருவார் பெருந்துறை வரையில் ஏறித் | திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திரு ஆர் பெருந்துறை = ஆவுடையார் கோயில் | அருள் அழகு நிறைந்த திரு ஆர் பெருந்துறை மலையில் ஏறி
(இங்கு ஆலயம் மலையாக உருவாக்கப்படுத்தப்பட்டுள்ளது ) |
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய | திருத்தகு = திரு தரும் = இறைவன் தரும்
மின்ஒளி = அருள் ஆகிய ஒளி
திசைதிசை = அனைத்து திசைகளிலும்
விரிய = பரவ | இறைவன் தரும் அருள் ஆகிய ஒளி அனைத்து திசைகளிலும் பரவ |
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70 | ஐம்புலம் பந்தனை = ஐந்து புலங்களினால் அடைக்கப்பட்ட இந்த பந்த உடம்பை
வாள் அரவு இரிய = வாள் போன்ற நீண்ட கொடிய பாம்புகள் கெட்டு ஓட ( ஐந்து தலை பாம்பு என்று இந்த ஐந்து புலன்களை உருவக்கப்படுத்துகின்றார் மாணிக்கவாசகப்பெருமான் )
| ஐந்து புலங்களினால் அடைக்கப்பட்ட வாள் போன்ற நீண்ட கொடிய பாம்புகள் கெட்டு ஓட |
வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப | வெம் துயர் கோடை = வெப்பம் ஆகிய இரு வினை துயர்
மாத்தலை கரப்ப = பெரிய தலையை வெளியில் காட்டாதவாறு
| இரு வினை உடைய இந்த பிறவியின் கொடும் துன்பமாகிய கோடைகாலம் தனது பெரிய தலையை வெளியில் காட்டாதவாறு மறைத்துக்கொள்ள |
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர | எழில் = எழுச்சி
நீடு எழில் = அடியவர்கள் இறைவன் கருணையால் பொலிவு எழுச்சி பெற்று விளங்குதல்
வாள் ஒளி = மிக்க ஒளி
| அடியவர்கள் இறைவன் கருணையால் பொலிவு எழுச்சி பெற்று மிக்க ஒளி போன்று ஒளிர |
எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து | கோபம் = பட்டுப்பூச்சி , இந்திரகோபப்பூச்சி
| எங்களின் பல பிறவிகள் போன்ற இந்திரகோபப்பூச்சிகளை மிகுவித்து |
முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப் | முரசு ஏறிந்து = ஓங்கி முரசை ஒலிக்கச்செய்து
மாப்பெருங் கருணையில் = இறைவனின் மிகப்பெரிய கருணை | ஓங்கி முரசை ஒலிக்கச்செய்து போல இறைவனின் மிகப்பெரிய கருணை ஒளித்து முழங்கி |
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75 | பூப்புரை = அடியவர்கள் பூப்போன்ற கைகள்
அஞ்சலி = கைகூப்பி வணங்கல்
காந்தள் = காந்தள் மலர் | அடியவர்கள் பூப்போன்ற கைகள் காந்தள் மலர் போன்று கைகூப்பி வணங்க |
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் | எஞ்சா = குறையாத
இன்னருள் = இனிய அருள்
நுண்துளி கொள்ளச் = நுண்ணிய துளி போல | இறைவனின் குறையாத இனிய அருள் நுண்ணிய துளி போல |
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக் | செஞ்சுடர் = இறைவனின் போராளி ஆகிய அருள்
திசைதிசை = எல்லா திசைகளிலும்
தெவிட்டல் = நிறைதல் | இறைவனின் பேரொளி ஆகிய அருள் வெள்ளம் போல எல்லா திசைகளிலும் நிறைந்து |
கேதக் குட்டம் கையற வோங்கி | கேத குட்டம் கை அற ஓங்கி
கேதம் = துன்பம்
கேத குட்டம் = துன்பமாகிய சிறு குளம் ( குட்டை) ( யான் எனது என்ற துன்பமாகிய குளம் )
கை அற ஓங்கி = வரையுற ஓங்கி = மீளுதல் / அரிதாதல் / கையறுதல் | பெரும் மழை வெள்ளத்தில் சிறு குளம் , குட்டைகள் காணாமல் போவது போல , இறைவனின் அருளின் வெள்ளத்தில் நமது துன்பமாகிய சிறு குளம் மறைந்துவிடும் |
இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை | இருமு = இரு மூன்று = 6
இருமுச் சமயத்து = ஆறு சமயம்
பேய்த் தேரினை = கானல் நீரினை
| ஆறு சமையங்களாகிய கானல் நீரினை |
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80 | நீர்நசை = நீர் விடாய் , தண்ணீர் தாகம்
நெடுங்கண் = நீண்ட கண்
மான்கணம் = மான் கூட்டங்கள்
| தண்ணீர் தாகம் எடுத்து ஓடிவரும் நீண்ட கண்களை உடைய மான் கூட்டங்கள் |
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் | தவப்பெரு வாயிடைப் பருகி = மிகப்பெரிய தம் வாயினால் குடித்து ( தவம் ஆகிய பெரிய வாயினால் இறைவன் அருளை குடித்து )
தளர்வொடும் = தளர்ச்சி உடைய நடை
| மிகப்பெரிய தம் வாயினால் குடித்து , தம் தளர்ச்சி உடைய நடையால் |
அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன | அவம் = கேடு
தாபம் = விடாய் , தாகம்
அசைதல் = வருந்தல் | கேடு விளைவிக்கும் பெரும் தாபம் நீங்காது வருந்தின |
ஆயிடை வானப் பேரியாற்று அகவயின் | ஆயிடை = அந்த வேளையில் , அவ்விடத்தே
வானப் பேரியாற்று = வானத்தில் (இருந்து வந்த இறை அருள் என்ற ) பெரிய ஆற்றின்
அகவயின் = உள்ளே
| அந்த வேளையில் வானத்தில் (இருந்து வந்த இறை அருள் என்ற ) பெரிய ஆற்றின் உள்ளே |
பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச் | பாய்ந்து எழுந்து = புகுந்து பெருகி
இன்பம் பெருஞ்சுழி கொழித்துச் = இன்பமாகிய பெரும் சுழியை சுழித்திக்கொண்டு சென்று | புகுந்து பெருகி இன்பமாகிய பெரும் சுழியை சுழித்திக்கொண்டு சென்று |
சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85 | சுழித்து எம் பந்தம் மாக்கரை பொருது அலைத்து இடித்து
பொருது = ஒன்றுதல், மோதுதல்
| சுழித்து எமது பந்தம் என்னும் பெரிய கறைகளை மோதி அலைத்து இடித்து |
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் | ஊழ் ஊழ் = முறை முறையாய்
ஓங்கிய = வளர்ந்த
நங்கள் = எங்கள் | முறை முறையாய் வளர்ந்த எங்கள் |
இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து | இருவினை மாமரம் = நல்ல வினை ( புண்ணியம்) மற்றும் தீய வினை ( பாவம் ) என்ற பெரிய மரங்களை
| நல்ல வினை ( புண்ணியம்) மற்றும் தீய வினை ( பாவம் ) என்ற பெரிய மரங்களின் வேர் பறித்து எழுந்து |
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச் | உருவ = அழகிய
அருள் நீரோட்டா = அருள் நீர் ஓட்டம் = இறைவன் அருள் வெள்ளம் பாய்தல் = இறைவன் உயிர்களுக்கு அருள் நீரினை செலுத்துதல் என்று பொருள் கொள்ள வேண்டும்
அருவரைச் = ஏறுவதற்கு அரிதான கடினமா மலை
| அழகிய இறைவன் உயிர்களுக்கு அருள் நீரினை செலுத்தி , ஏறுவதற்கு அரிதான கடினமா மலையில் |
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் | சந்து = சந்தனமரம்
வான்சிறை = பெரிய அணை
மட்டவிழ் = மட்டு அவிழ் = (மட்டு)தேன் (அவிழ் )மலரச் செய்
| ( ஏறுவதற்கு அரிதான கடினமா மலை போல ) சந்தனத்தால் ஆன மிகப் பெரிய அணை கட்டி , தேன் மலரச் செய்யும் |
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90 | வெறி மலர் குளம் வாய் கோலி நிறை அகில் 90
வெறி மலர் = நூறு நறுமண நாற்றத்தை உடைய மலர்
மலர் குளம் = இதயம் கமலம் என்னும் குளம்
வாய் = வழி
கோலி = கோலுதல் = உண்டாகுதல் , வளைத்து
நிறை = நிறுத்துதல் , ஐம்பொறிகளையும் அடக்குதல்
அகில் = சந்தனமர வகையைச் சேர்ந்த மர வகைகளில் ஒன்று.
| தேன் செறியும் நூறு நாற்றத்தை உடைய இதயம் கமலம் என்னும் குளம் அதனை மலரச் செய்து வழி உண்டாகி , ஐம்பொறிகளையும் அடக்குதல்
தேன் பறக்கின்ற சிவ மனம் வீசும் குளம் உண்டாகி |
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் | மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
மாப்புகைக் கரைசேர் = பெரிய புகை உடைய குளத்தின் கரைகள் ( வரப்புகள் )
வண்டுடைக் குளத்தின் = வண்டுகளை உடைய குளத்தில்
| அகில் மனம் வீசும் பெரிய புகை உடைய வண்டுகளை உடைய குளத்தின் கரைகள் |
மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி | மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி
மீக்கொள = அருள் வெள்ளமானது
மேல்மேல் = மேலும் மேலும்
மகிழ்தலின் நோக்கி = மகிழ்ச்சியை நோக்கி
| அருள் வெள்ளமானது மேலும் மேலும் மகிழ்ச்சியை நோக்கி ஆர்ப்பரித்து |
அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத் | அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத்
அருச்சனை வயல் உள் = வழிபாடு என்னும் வயலின் உள்ளே
அன்புவித்து இட்டுத் = அன்பு என்னும் வித்தை விதைத்து ( அன்பு வித்து இட்டு)
| வழிபாடு என்னும் வயலின் உள்ளே அன்பு என்னும் வித்தை விதைத்து |
தொண்ட உழவர் ஆரத் தந்த | தொண்ட உழவர் ஆரத் தந்த
தொண்ட உழவர் = அடியவர்களை உள்ளவர்களாக இங்கு உருவகப்படுத்துகின்றார் மாணிக்கவாசகப்பெருமான்
ஆரத் தந்த = அடியவர்கள் சிவ போகத்தை பயனை நுகருமாறு
| அடியவர்கள் சிவ போகத்தை பயனை நுகருமாறு தந்து அருளிய |
அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95 | அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95
அண்டத்து அரும்பெறல் = உலகம் அனைத்தும் பெறுவதற்கு அரிய
மேகன் = மேகம் போல அருள் மழை பொழியும் இறைவன் சிவபெருமான்
| உலகம் அனைத்தும் பெறுவதற்கு அரிய மேகம் போல அருள் மழை பொழியும் இறைவன் சிவபெருமான் வாழ்க |
96 - 123 இறை பேரின்பத்தில் திளைத்து இறைவன் திருவருளை புகழ்தல் |
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க | கரும் = கருமை = பெருமை என்னும் பொருட்டதால்
பணம் = படம் ( நாகம் படம் எடுப்பது )
கச்சை = இடுப்பில் கட்டும் அரைக்கச்சை ( பட்டிகை )
இறைவனை சார்ந்தே இருக்கும் பாம்பு குண்டலினி எனப்படும் | பெரிய படத்தினை உடைய பாம்பை அரைக் கச்சாக அணிந்த இறைவன் வாழ்க |
அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க | அரும்தவர் = செய்வதற்கு அறிய தவம் செய்பவர்
ஆதி = முதல்வன் | செய்வதற்கு அறிய தவம் செய்பவர்களுக்கு அருள் செய்யும் முதல்வன் வாழ்க |
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க | அச்சம் = பிறவியால் வரும் அச்சம் | உயிர்களின் பிறவி பிணியால் உண்டாகும் பயத்தை நீக்கிய வீரன் வாழ்க |
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க | நிச்சலும் = எப்பொழுதும்
ஈர்த்தாட் கொள்வோன் = தம் அன்பினால் ஈர்த்து உயிர்களை ஆட் கொள்பவன்
| எப்பொழுதும் தம் அன்பினால் ஈர்த்து உயிர்களை ஆட் கொள்பவன் வாழ்க |
சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100 | சூழ்இருள் துன்பம் = உயிர்களின் இரு வினையால் உண்டகும் பிறவி துன்பம்
துடைப்போன் = நீக்குபவன்
| உயிர்களின் இரு வினையால் சூழ்ந்து உண்டகும் பிறவித்துன்பம் நீக்குபவன் வாழ்க |
எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க | எய்தினர்க்கு = தன்னை வந்து அடைபவருக்கு
ஆர்அமுது = அரிய அமுதம் = இறைவன் திருவடி அடையும் பேரின்பம்
அளிப்போன் = அளிப்பவன் = வழங்குபவன் | தன்னை வந்து அடைபவருக்கு அரிய அமுதம் ஆகிய இறைவன் திருவடி அடையும் பேரின்பம் என்ற ஒன்றை வாரி வாரி வழங்குபவன் வாழ்க |
கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க | கூர்இருள் கூத்தொடு =மிக்க இருளை உடைய ஊழிக்காலம் ( அழிவுக்காலம் ) என்ற சிவபெருமான் நடத்தும் கூத்து
குனிப்போன் = பெரும் ஊழிக்காலத்தின் ( அழிவுக்காலம் ) பின் இறைவன் நடத்தும் கூத்து ( உலகத்தை தோற்றுவித்தல் ) | மிக்க இருளை உடைய ஊழிக்காலம் ( அழிவுக்காலம் ) என்ற சிவபெருமான் நடத்தும் கூத்து மற்றும் பெரும் ஊழிக்காலத்தின் பின் இறைவன் நடத்தும் கூத்து ( உலகத்தை தோற்றுவித்தல் ) என்ற இரண்டு கூத்தையும் நடத்தும் இறைவன் வாழ்க |
பேர்அமைத் தோளி காதலன் வாழ்க | பேர் = பெரிய
அமை = மூங்கில் ( இது உமை அம்மையின் தோளுக்கு உவமானப்படுத்தப்பட்டது ) | பெரிய மூங்கில் போல தோள்களை உடைய உமை அம்மையின் காதலன் வாழ்க |
ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க | ஏதிலார்ககு = அன்பினால் இயைபில்லாதவருக்கு
ஏதில் = இயைபு (பொருத்தம்) | அன்பினால் இயைபில்லாதவருக்கு தானும் இயைபு இல்லாதவனாகும் இறைவன் வாழ்க |
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105 | காதலர்க்கு = அன்புஉடைய அடியவர்களுக்கு
எய்ப்பினில் = கஷ்டகாலம்
வைப்பு = புதையல்
| அன்புஉடைய அடியவர்களுக்கு கஷ்டகாலதில் புதையல் போன்ற இறைவன் வாழ்க |
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி | நச்சு = நஞ்சு
அரவு = பாம்பு
நம்பன் = இறைவன் ( ஆண்களில் சிறந்தோன்)
| நஞ்சு உடைய பாம்பு மகுடி கொண்டு ஆட்டிய இறைவன் போற்றி
( இது ஒரு திருவிளையாடல் ) |
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி | பிச்சு = பித்து
ஏற்றிய = ஆக்கிய | இறைவன் மேல் என்னை பித்து பிடித்தவன் போல ஆக்கி இவன் பித்தன் என்று சொல்லும்படியான நிலையை உண்டாக்கிய பெரியோனுக்கு வணக்கம் |
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி, நாற்றிசை | நீற்றொடு = திருவெண்ணீற்றோடு
நாற்றிசை = நான்கு திசைகளிலும் | திருவெண்ணீற்றோடு திருக்காட்சி அளிக்க வல்லவனுக்கு வணக்கம் |
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் | நடப்பன நடாஅய்க் = நடப்பனவற்றை நடத்தி, இயங்குபவற்றை இயக்கியும்
கிடப்பன கிடாஅய் = கிடப்பனவற்றை கிடத்தி
நடாஅய்க் = நடத்தி
கிடாஅய் = கிடத்தி | இயங்குபவற்றை இயக்கியும் , கிடப்பனவற்றை கிடத்தி |
நிற்பன நிறீஇச் 110 | நிறீஇ = நிறுத்தி | நிற்பவற்றை நிற்கவும் |
சொல்பதம் கடந்த தொல்லோன் | பதம் = அளவு
சொல்பதம் = சொலின் ஆற்றல்
தொல்லோன் = பழமையானவன்
| சொலின் ஆற்றல்களை கடந்த பழமையானவன் |
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் | உள்ளத் துணர்ச்சி = மனதின் உணர்ச்சி
கொள்ளவும் = உணர்வதற்கு
படாஅன் = அப்பாற்பட்டவன் | மனதின் உணர்ச்சியினால் உணர்வதற்கு அப்பாற்பட்டவன் |
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன் | கண்முதல் புலனாற் = கண் முதலிய ஐந்து புலன் உணர்ச்சிகளால்
| கண் முதலிய ஐந்து புலன் உணர்ச்சிகளால் உணர , காண இயலாதவன் |
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் | விண்முதல் பூதம் = ஆகாயம் முதல் ஐந்து பஞ்ச பூதங்கள்
வகுத்தோன் = படைத்தவன் | ஆகாயம் முதல் ஐந்து பஞ்ச பூதங்கள் வெளிப்படையாக தோன்றும்படி படைத்தவன் |
பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115 | பூவில் நாற்றம் = பூ மணம்
போன்றுயர்ந் தெங்கும் = போன்று உயர்ந்து (ஓங்கி) எங்கும் ( எவ்விடத்தும் )
| பூவில் மணம் போன்று ஓங்கி எவ்விடத்தும் |
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை | ஒழிவற நிறைந்து = நீக்கம் இல்லாமல் எங்கும் நிறைந்து
மேவிய பெருமை = பரவிய பெருந்தன்மை
| நீக்கம் இல்லாமல் எங்கும் நிறைந்து பரவிய பெருந்தன்மை |
இன்று எனக்கு எளிவந்து அருளி | எளிவந்து = எளியவனாய் வந்து
| இன்று எனக்கு எளியவனாய் வந்து அருள் செய்து |
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் | அழி தரும் = அழிவைத்தரும்
ஆக்கை = இந்த உடம்பை
ஒழியச்செய்த = இனிமேல் பிறவி எடுக்காமல் செய்த
ஒண்பொருள் = சிறந்த பொருளானவன் | அழிவைத்தரும் இந்த உடம்பை இனிமேல் பிறவி எடுக்காமல் செய்த சிறந்த பொருளானவன் |
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி | இன்று எனக்கு எளி வந்து இருந்தனன் போற்றி
| இன்னாளில் எனக்கு எளிதாக குருவாய் அருளியவனுக்கு வணக்கம் |
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120 | அளிதரும் = அன்பு உருகச்செய்யும்
ஆக்கை = இந்த உடம்பை
செய்தோன் = உருவாக்கியவன் | அன்பு உருகச்செய்யும் இந்த உடம்பை உருவாக்கியவனுக்கு வணக்கம் |
ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி | ஊற்று இருந்து = இன்ப அருள் நீர் ஊற்றாக இருந்து
உள்ளம் களிப்போன் = எனது உள்ளதை மகிழ்ச்சி கொள்ளசெய்பவனுக்கு
| இன்ப அருள் நீர் ஊற்றாக இருந்து எனது உள்ளதை மகிழ்ச்சி கொள்ளசெய்பவனுக்கு வணக்கம் |
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப் | ஆற்றா இன்பம் = பெறுவதற்கு மிகவும் அரிதான இன்பம்
அலர்தல் = பரத்தல்
| பெறுவதற்கு மிகவும் அரிதான இன்பம் எங்கும் பரந்து அலை வீச செய்து |
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் | போற்றா = தாங்க இயலாத
ஆக்கையைப் = உடலை
பொறுத்தல் = தங்குதல்
புகலேன் = விரும்பேன் | ( மேற்கூறிய அருள் அலையை) தாங்க இயலாத எனது இந்த உடலை இனிமேலும் தங்குதல் நான் விரும்பேன் |
124 - 162 காண மாணிக்கம் இறைவன் கையில் கிடைத்த நெல்லிக்கனி ஆனவன் |
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் | மரகதம் = பச்சை மரகத மாணிக்க கல்
குவாஅல் = குவியல்
பிறக்கம் = கூட்டம் | பச்சை மரகத கல் குவியலும் , மாமணிக்க குவியலும் ஒன்று சேர்ந்து |
மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125 | மின்ஒளி = மின்னல் ஒளி
பொன்னொளி = பொன்ஒளி | மின்னல் ஒளியை தன்னகத்தே கொண்டு பொன்ஒளி போல இறைவன் விளங்க |
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் | திசைமுகன் = பிரமன்
| திருமால் ,பிரமன் முதலிய தேவர்கள் சென்று அடி முடி தேடி காணாமலும் அதாவது தன்னை காண முயன்றவருக்கு தன்னை ஒளித்தும் |
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் | முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
முறை = வேதநூல்கள்
முறையுளி = முறை ஒளி
ஒளித்தும் = தன்னை மறைத்தும் | வேதநூல்கள் ஆராய்ந்து விரதங்களை செய்ய முயன்றவருக்கு தன்னை மறைத்தும் |
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து | ஒற்றுமை கொண்டு = மனதை அன்பினால் ஒருமைப்படுத்திக்கொண்டு
| மனதை அன்பினால் ஒருமைப்படுத்திக்கொண்டு இறைவனை நோக்கும் உள்ளம் கொண்ட |
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் | உற்றவர் = அடியவர்கள்
உறைப்பவர்க்கு = உறுதியாக நிற்பவருக்கு
| அடியவர்கள் மனம் வருந்தும் அளவிற்கு உறுதியாக நிற்பவருக்கு தன்னை ஒளித்தும் |
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130 | மறை = மந்திரம்
மறைத்திறம் = மந்திர தந்திர திறமை
| மந்திர தந்திர திறமை மூலம் இறைவனை காண முயலுபவர்களுக்கு அவர்கள் வருந்தும்படி தன்னை மறைத்தும் |
இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு | இத்தந் திரத்தில் காண்டும் = இந்த தந்திரத்தில் காண்போம்
| இந்த தந்திரத்தில் காண்போம் என்று இருந்தோர்க்கு |
அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும் | அத்தந் திரத்தில் = அந்த தந்திரத்தில்
அவ்வயின் = அவ்விடம் , அதன் உள்ளேயே
| அந்த தந்திரத்தில் அதன் செயல் முறையின் உள்ளேயே தன்னை மறைத்தும் |
முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி | முனிவு அற = வெறுப்பு இல்லாமல்
நோக்கி = ஆராய்ந்து
நனிவரக் கௌவி = அன்பினால் மிகுதியாக பற்றி | வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து பார்த்து அடியவர் தனது அன்பினால் மிகுதியாக பற்றி |
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து | ஆணெனத் தோன்றி = ஆண் என்று தோன்றி
அலியெனப் பெயர்ந்து = அலி என்று உருமாறியும்
| ஆண் என்று நினைக்கும்படி தோன்றி , அலி என்று உருமாறியும் இயங்கியும் |
வாள்நுதல் பெண்என ஒளித்தும் , சேண்வயின் 135 | வாள்நுதல் = ஒளி பொருந்திய நெற்றியை உடைய
சேண்வயின் = தூரத்தில்
| ஒளி பொருந்திய நெற்றியை உடைய பெண் ( உமையம்மை) என தன்னை ஒளித்தும் , தூரத்தில் |
ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் | ஐம்புலன் செலவிடுத்து = தனது ஐம் புலன்களை நீக்கி
அருவரை = அரும் மலை வரை
| தனது ஐம் புலன்களை ஒழித்து அரும் மலை தோறும் சென்று |
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை | துற்றவை = நுகர்பொருள் ( இவுலகத்தில் அனுபவிக்கும் பொருள்கள் )
துற்றவை துறந்த = இவுலக பற்றுகளை நுகர்பொருள் எல்லாம் துறந்த
வெற்று உயிர் ஆக்கை = உடம்பை மட்டும் உடைய ஊனம் இல்லா உடல் உடைய | இவுலக பற்றுகளை நுகர்பொருள் எல்லாம் துறந்து உடம்பை மட்டும் உடைய ஊனம் இல்லா உடல் உடைய |
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் | அருந்தவர் = செய்வதற்கு அறிய தவம் செய்பவர்
காட்சியுள் = தூய மன எண்ணத்தின் உள்ளே
திருந்த ஒளித்தும் = செம்மை ஆக மறைந்து இருந்தும்
| செய்வதற்கு அறிய தவம் செய்பவர்களின் தூய மன எண்ணத்தின் உள்ளே செம்மை ஆக மறைந்து இருந்தும் |
ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும் | ஒன்று = ஒரு முழு முதற் பொருள்
உண்டில்லை = உண்டு இல்லை
யென்றறி = என்ற அறிவு
வொளித்தும் = ஒளித்தும் | ஒரு முழு முதற் பொருள் உண்டு இல்லை என்ற அறிவுக்கு மறைந்தும் |
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140 | பண்டே = பழைய காலத்தில்
பயில்தொறும் = பழகும் தோறும்
| பழைய காலத்தில் பழகும் தோறும் இந்த காலத்தில் பழகும் தோறும் |
ஒளிக்கும் சோரனைக் கண்டனம் | ஒளிக்கும் சோரனைக் = மறைக்கும் கள்ளனை
கண்டனம் = கண்டோம்
| மறைக்கும் கள்ளனை கண்டோம் |
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் | ஆர்மின் ஆர்மின் = ஆரவாரியுங்கள் ஆரவாரியுங்கள்
நாண்மலர் = நாள் + மலர் = அன்றலர்ந்த மலர
| ஆரவாரியுங்கள் ஆரவாரியுங்கள் அன்றலர்ந்த மலர் மாலைகளால் |
தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின் | தாள்தனை இடுமின் = இறைவன் கால்களை கட்டுங்கள்
சுற்றுமின் = இறைவனை வலம் வாருங்கள்
சூழ்மின் = இறைவனை சூழ்ந்து நில்லுங்கள்
| இறைவன் கால்களை கட்டுங்கள் இறைவனை வலம் வாருங்கள் இறைவனை சூழ்ந்து நில்லுங்கள் |
தொடர்மின் விடேன்மின் | தொடர்மின் = பின் தொடருங்கள்
விடேன்மின் = விடாதீர்கள்
| பின் தொடருங்கள் விடாதீர்கள் |
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145 | பற்றுமின் = இறைவனை பற்றுங்கள்
பற்றுமுற்று = பற்று அறுத்தவர்கள்
| இறைவனை பற்றுங்கள் என்று பற்று அறுத்தவர்களுக்கு தன்னை ஒளித்தும் |
தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை | தன்நேர் = தனக்கு இணை ஆனவர்
இல்லோன் தானே = இல்லாதவர் தானே
| தனக்கு இணை ஆனவர் என்று ஒருவர் இல்லாதவர் ஆன தன்மை |
என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி | என் நேர் அனையோர் = என்னைப்போல உள்ளவர்கள்
கேட்கவந்து = கேட்கும்படி
இயம்பி = சொல்லி
| என்னைப்போல உள்ளவர்கள் கேட்கும்படி சொல்லி |
அறைகூவி ஆட்கொண்டருளி | அறைகூவி = வலிய அழைத்து
| வலிய அழைத்து ஆட்கொண்டருளி |
மறையோர் கோலம் காட்டி அருளலும் | மறையோர் = வேதம் ஓதுபவர்கள் , அந்தணர்கள்
| வேதம் ஓதுபவர்கள் கோலம் காட்டி அருளலும் |
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150 | உலையா அன்பு = வற்றாத அன்பு
என்பு = உடம்பு , எலும்பு | வற்றாத அன்பு உள்ளவர்கள் உடம்பு உருக்குலைந்து போகும் அளவிற்கு ஓலமிட்டு |
அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித் | அலைகடல் திரையில் = அலைகடல் அலை போல
ஆர்த்து ஆர்த்து ஓங்கித் = இடைவிடாத ஓங்கி ஆராவாரம் செய்து
| அலைகடல் அலை போல இடைவிடாது ஓங்கி ஆராவாரம் செய்து |
தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப் | தலை தடுமாறா வீழ்ந்து = தலை தடுமாறி வீழ்ந்து
| தலை தடுமாறி வீழ்ந்து , அழுது புரண்டு அலறி |
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து | பித்தரின் மயங்கி = பித்தரை போல மயங்கி
மத்தரின் மதித்து = வெறி பிடித்தவர் போல நினைத்து
| பித்தரை போல மயங்கி , வெறி பிடித்தவர் போல நினைத்து |
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் | நாட்டவர் = நாட்டில் உள்ளவர்கள்
மருளவும் = மிரண்டுபோகவும் , அச்சம் அடையவும் | கேட்டவர் வியப்பவும் = கேள்வி கேட்பவர் வியப்பு அடையவும் |
கடக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155 | கடக்களிறு ஏற்றா = ஆண் யானை தன்மீது பாகனை ஏற்றாமல்
தடம்பெரு மதத்தின் = மிகப்பெரிய மதத்தால் | ஆண் யானை தன்மீது பாகனை ஏற்றாமல் மதம் பிடித்தது போல |
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு | ஆற்றேன் ஆக = பொறுத்துக்கொள்ள இயலாதவன் ஆக
அவயவம் = என் உறுப்புகளை
சுவைதரு = சுவை தரும்
| பொறுத்துக்கொள்ள இயலாதவன் ஆக என் உறுப்புகளை , சுவை தரும் |
கோல்தேன் கொண்டு செய்தனன் | கோல்தேன் = கொம்புத்தேன்
| கொம்புத்தேன் கொம்புத்தேன் கொண்டு ஆக்கினவன் |
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் | ஏற்றார் = பகைவருடைய
மூதூர் = முப்புரங்கள் , பழைய ஊராகிய திரிபுரங்கள்
எழில்நகை = அழகிய நகை ஆகிய
எரியின் = நெருப்பில் | பகைவருடைய பழைய ஊராகிய திரிபுரங்கள் அழகிய நகை ஆகிய நெருப்பில் |
வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின் | வீழ்வித்து = வீழவைத்து
ஆங்கு அன்று =
அருட்பெருந் தீயின் = அருள் பெரும் தீயின்
| அந்த காலத்தில் வீழவைத்து அருள் பெரும் தீயின் |
அடியோம் அடிக்குடில் 160 | அடியோம் = அடியவர்களுக்கு
அடிக்குடில் = உடம்பாகிய குடில் | அடியவர்களுக்கு உடம்பாகிய குடில் |
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் | வழாமை = நீதிதவறாமை
யொடுக்கினன் = ஒடுக்கினன் = அடங்க செய்தவன்
| ஒருத்தரும் நீதி தவராதபடி அடங்க செய்தவன் |
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் | தடக்கையின் = பெரிய கையில் உள்ள
| பெரிய கையில் உள்ள நெல்லிக் கனி போன்று இருந்தான் |
163 - 182 உரைக்க இயலா பேரின்பம் |
சொல்லுவது அறியேன் வாழி ! முறையோ ! | சொல்லுவது அறியேன் = எனது இறைவன் எம்பெருமானை நாயை விட கீழான நான் புகழ்ந்தது சொல்லும் முறை அறியாதவன்
வாழி = இறைவன் வாழ்க
முறையோ = இவ்வாறு நான் வாழ்வது முறையோ
| எனது இறைவன் எம்பெருமானை நாயை விட கீழான நான் புகழ்ந்தது சொல்லும் முறை அறியாதவன். இவ்வாறு நன் வாழ்வது முறையோ |
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது | தரியேன் = இறைவன் ஆட்கொள்வதனால் ஆகும் இன்பத்தை தங்க மாட்டேன்
நாயேன் = நாயேன் ஆன நான்
| இறைவன் ஆட்கொள்வதனால் ஆகும் இன்பத்தை தங்க மாட்டேன் மேலும் நாயேன் ஆக எனைச் செய்தது |
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165 | தெரியேன் = காரணத்தை தெரியாதவன்.
ஆஆ = ஆவா = ஐய்யோ
அடியேற்கு = எனக்கு | காரணத்தை தெரியாதவன்.ஐய்யோ செத்தேன்.எனக்கு |
அருளியது அறியேன் பருகியும் ஆரேன் | அருளியது அறியேன் = இறைவன் அருளியது பற்றி ஏதும் அறிந்திலாதவன்.
பருகியும் ஆரேன் = இறைவன் அருளிய அருளை சிறுக சிறுக குடித்தும் நிறைவு பெற்றிலேன்
| இறைவன் அருளியது பற்றி ஏதும் அறிந்திலாதவன். இறைவன் அருளிய அருளை சிறுக சிறுக குடித்தும் நிறைவு பெற்றிலேன் |
விழுங்கியும் ஒல்ல கில்லேன் | ஒல்ல கில்லேன் = பொறுக்கமாட்டேன் ,பொறுக்கும் ஆற்றல் உடையேன் அல்லன்
| முழுவதும் விழுங்கியும் பொறுக்கமாட்டேன் |
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து | செழுந்தண் பாற்கடல் = செழுமை ஆகிய குளிர்ந்த பால் கடலின்
திரை = அலை ( திரைகடல் ஓடியும் திரவியம் தேடு )
திரை புரைவித்து = அலைகள் போல செய்து | செழுமை ஆகிய குளிர்ந்த பால் கடலின் அலைகள் போல செய்து |
உவாக்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப | உவாக்கடல் நள்ளும்நீர் = நிறை மதி நாளன்று பொங்குகின்ற கடல்
நள்ளும்நீர் = நடுவில் உள்ள
உள்அகம் ததும்ப = உள்ளம் நிரம்பி வழிய
| நிறை மதி நாளன்று பொங்குகின்ற கடல் நடுவில் உள்ள நீர் போல, உள்ளம் நிரம்பி வழிய |
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170 | வாக்கு இறந்து = உள்ளத்தில் இருந்து | உள்ளத்தில் இருந்து வந்த அருள் அமுதம் எனது ஒவொரு மயிர்க்கால் வரையில் பெருகி |
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை | தேக்கிடச் செய்தனன் = தேங்கி நிற்க செய்தான் என் இறைவன்.
கொடியேன் = இந்த கொடியவனுடைய
ஊன்தழை = மாமிசம் செழித்த , ஊனாகிய கூரை உடைய
| தேங்கி நிற்க செய்தான் என் இறைவன்.இந்த கொடியவனுடைய ஊனாகிய கூரை உடைய அதனில் |
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே | குரம்பை = குடில் , சிறு வீடு , உடல் | உடல் முழுவதும் , இந்த நாய் அடியவரின் உடலின் உள்ளே |
குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய | குரம்பை = குடில் என்ற உடம்பு
| இந்த உடல் குரம்பை கொண்டு அருள் இன்தேன் பாய்த்தி நிரம்பிய |
அற்புதம் ஆன அமுத தாரைகள் | அற்புதம் = ஆச்சரியம்
| வியத்தகு பேரின்ப அமுத நீரை |
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175 | எற்புத் துளைதொறும் = உடலில் உள்ள எலும்பு தோறும் | உடலில் உள்ள எலும்பு தோறும் அருளை ஏற்றினான் இறைவன் , உருகுவது |
உள்ளம் கொண்டோ ஓர் உருச்செய் தாங்கு எனக்கு | உள்ளம் கொண்டோர் = உருகுவதாகிய மனதைக்கொண்டு
ஓர் உருச்செய் தாங்கு எனக்கு = ஓர் உருவம் அமைத்தல் போல எனக்கு
| உருகுவதாகிய மனதைக்கொண்டு ஓர் உருவம் அமைத்தல் போல எனக்கு |
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய | ஆக்கை = உடல்
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் = எனக்கு பேரின்ப அமுதத்தை கொண்டு வாயுற இனிமை செய்யும் உடம்பை அமைத்தவன் என் நாதன்
ஒள்ளிய = சிறந்த | எனக்கு பேரின்ப அமுதத்தை கொண்டு வாயுற இனிமை செய்யும் உடம்பை அமைத்தவன் என் நாதன், சிறந்த |
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை | கன்னல் = கரும்பு
களிறு = யானை
கடைமுறை = முடிவில் | கனி தேர் களிறு எனக் = இனிய உணவு ஆராய்ந்து உண்ணும் யானை போல ,முடிவில் |
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் | இருப்பது = அவனை நாடி இருப்பது
ஆக்கினன் = என் உள்ளே
| என்னையும் அவனை நாடி இருப்பது போல ஆக்கினன் , என் உள்ளே |
கருணை வான்தேன் கலக்க 180 | கருணை வான்தேன் = இறைவன் அருள் என்னும் தேன்
| இறைவன் அருள் என்னும் தேன் கலக்க |
அருளொடு பரா அமுது ஆக்கினன் | பரா அமுது = உயர்ந்த அமுதம்
| அந்த அருளோடு உயர்ந்த பேரின்ப அமுதம் ஆக்கினன் |
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே | பிரமன் மால் = ப்ரம்ம, திருமால்
| நான்முகனும் , திருமாலும் அடி முடி அறியாத தன்மையுடைய என் பெருமான் |
திருச்சிற்றம்பலம் |
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.
|
சைவ மகுடம் தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாறா போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெணுரு ஆனாய் போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!! |
திருச்சிற்றம்பலம் |
பதிப்பு உரிமை :- இந்த பதிப்பு / பதிவு சிவன் சொத்து. |